Monday, 8 August 2011

திருக்கருக்குடி..

திருக்கருக்குடி ... இப்படி சொன்னால் இன்று யாருக்கும் தெரியாது. தலத்தின் இன்றைய பெயர் மருதாநல்லூர்.

மருதாநல்லூர் என்றவுடன் நினைவுக்கு வருவது ஸ்ரீ சத்குரு சுவாமிகள்.
நாமசங்கீர்த்தன பிதாமகர். தியாகராஜ சுவாமிகளுக்கு தீட்சை அளித்தவர்.
போஜேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்தை காவிரிக் கரையில் கண்டு பிடித்தவர். சுவாமிகளை பற்றிய விஷயங்களை வேறு பதிவுகளில் பார்க்கலாம்.

வழி:
மருதாநல்லூர், கும்பகோணம் - வலங்கைமான்  சாலையில் உள்ளது. மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் மடத்திற்கு பின்புறம் இந்த ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு  மிக அருகே கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி அம்பிகை ஆலயம் உள்ளது.

இறைவன் பெயர்: சற்குணலிங்கேஸ்வரர், கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர்
இறைவி பெயர்: சர்வலங்கார நாயகி, அத்வைத நாயகி, கல்யாணநாயகி

சிறப்பு : ஹனுமத் லிங்கம்.

பதிகம் : திருஞானசம்பந்தர் - 1

கோயில் அமைப்பு:

சிறிய கோயில்.கிழக்கு நோக்கியது . சுவாமி,அம்பாள் சன்னதிகள்
கிழக்கை நோக்கி உள்ளனர்.ஹனுமத் லிங்கம் தனி சன்னதியாக உள்ளது.கோஷ்டத்தில் நர்த்தனவிநாயகர், தட்சிணாமூர்த்தி,லிங்கோத்பவர் ஆகியோரின் மூர்த்தங்கள் உள்ளன. 

பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், நவகிரக சந்நிதி. சூரியன், சந்திரன், லிங்கோத்பவர், முருகன் உள்ளனர். இத்தல விநாயகர் வலம்புரி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பிரம்மா, சற்குணன் என்ற அரசன் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபபட்டுள்ளனர். இதனால் இறைவன் சற்குணலிங்கேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

தல வரலாறு:

ராமேஸ்வர வரலாறு இந்த தலத்திற்கும் சொல்லப்படுகிறது.ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் இத்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இராமேஸ்வரத்தில் நடந்தது போல குறித்த நேரத்தில் வழிபாடு செய்ய அனுமன் சிவலிங்கம் கொண்டு வர தாமதமானதால், ராமன் தன் அருகிலிருந்த மணலிலேயே இரண்டு கைகளாலும் லிங்கம் பிடித்து இத்தலத்தில் வழிபட்டார்.மண்ணினை கையால் பிடித்து செய்த சுவடுகள் தெரிகிறது.அர்ச்சகர் தீபம் கட்டும் போது அந்த சுவடுகளை காட்டினர்.
சுவாமிக்கு குவளை சார்தி அபிஷேகம் செய்கின்றனர். அனுமன் கொண்டு வந்த லிங்கம் ஹனுமத் லிங்கம் என்ற பெயரில் தனி சன்னதியில் உள்ளது.

தனஞ்சயன் என்ற வணிகனுக்கு ஏற்பட்ட தொழு நோயை சுவாமி குணப்படுத்தினார். அம்மன் சன்னதி எதிரில் தனஞ்சயன் சிலை உள்ளது.
உத்திரம் நட்சத்திரம் /கன்னி ராசி நண்பர்கள் வழிபடவேண்டிய ஆலயம் இது.

பரிகார தலங்களை போல பிரபலமான தலம் இல்லாததால் கூட்டம் அவ்வளவாக இல்லை.நான் பட்டிஸ்வரத்தில் இருந்து இந்த கோயிலுக்கு வந்தேன்.வழக்கம் போல நானும் அர்ச்சகரும் மட்டும் தான். இங்கிருந்து பிறகு கருவளர்ச்சேரி சென்றேன்.

குறிப்பு:

1 .மிகவும் சிறிய கிராமம்.வசதிகள் எதுவும் இல்லை. எனவே வேண்டிய பூஜை பொருட்களை கும்பகோணம் அல்லது பட்டிஸ்வரத்தில் வாங்கி கொள்ளவும்.
2 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.இத்தகைய பழமையான ஆலயங்களுக்கு செல்லும் போது நல்லெண்ணெய், திரி, karpooram போன்றவற்றை கொண்டு செல்லவும்.முடிந்தால் சிறிது புஷ்பம்.
3. ஆலய அர்ச்சகர் : ஸ்ரீதர் குருக்கள் . அலைபேசி எண்: 9943523852
இவரே ஏனாதி நாயனார் அவதரித்த எயினனூர் கோயிலையும் பார்க்கிறார்.

அங்கே எடுத்த படங்கள் சில...

தனஞ்செயன்




ஹனுமத் லிங்கம் 




No comments:

Post a Comment