Thursday 25 August 2011

கோழ்குத்தி

கோழ்குத்தி...

மயிலாடுதுறை பக்கம் உள்ள அழகான கிராமம்.வேறு பெயர்கள் : கோடிஹத்தி. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது. இந்த வாக்கியம் வாமன அவதாரத்தை பற்றி கூறியது.ஆனால் இந்த தலத்தில் மூர்த்தி மிகவும் பெரியவர். 

அத்தி மரத்திலான 14 அடி மூர்த்தி இவர்.

சுவாமி : ஸ்ரீ வானமுட்டி பெருமாள்

தாயார்: மூலவரின் மார்பில் ஸ்ரீ தயாலக்ஷ்மி . பூமா தேவி சில ரூபம்.

உத்சவர்: ஸ்ரீ தேவி பூமி தேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள்


இடம்: 

மயிலாடுதுறை கும்பகோணம் பேருந்து சாலையில் உள்ளது மூவலூர்.இந்த மூவலூரில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது கோழ்குத்தி.மூவலூர் ஆலயத்தில் இருந்து பாதை செல்கிறது. 


சிறப்பு: 

இங்கிருக்கும் மூலவர் அத்தி மரத்திலான 14 அடி மூர்த்தி இவர்.சங்கு சக்ரம்,  கதை மற்றும் அபய ஹஸ்த முத்திரையோடு கட்சி தருகிறார். சிறிய ஆலயம்.
மூன்று நிலை ராஜகோபுரம். ஒரே பிரகாரம். சமீபத்தில் குடமுழுக்கு செய்யப்பட்டது.ஆலயத்திற்கு எதிரே திருக்குளம்.விஸ்வரூப புஷ்கரணி.


சிறப்பு வாய்ந்த ஹனுமான் சன்னதி. வாலில் மணியோடு காட்சி தருகிறார்.இவர் சப்தஸ்வர ஆஞ்சநேயர். இசை வல்லுனர்கள் இந்த பெருமானை தரிசனம் செய்வர்.

தல வரலாறு:

பிப்பல மகரிஷியின் தொழுநோயை தீர்த்தவர் இந்த பெருமாள். சோழ மன்னன் ஒருவன் தன பாவங்களை போக்க 48 நாள் இந்த கோயிலின் தீர்த்தத்தில் நீராடி பெருமானை தரிசனம் செய்தான். இந்த அரசனுக்கு பெருமாள் அத்தி மரத்தில் காட்சி  கொடுத்தார்.வேரே திருவடியை தங்கி நிற்கிறது.

குறிப்புக்கள்: 
* ஆலயம் ஒரு சிறு கிராமத்தில் உள்ளது. வசதிகள் குறைவு தான்.
* ஆனால் இப்போது பிரபலம் ஆகி உள்ளது. சனி கிழமைகளில் கூட்டம் வருகிறது.

கோவில் நேரம்:
சனி :  07 -12 .௦௦ 04 .௦௦ - 08 .௦௦
08 -12 .௦௦ 04 .3௦ - 08 .௦௦
பட்டர் அலைபேசி: 97872 13226

மூலவர் படம்:

மூலவர்


                                                                   
                                                                 




 நன்றி : http://www.vanamuttiperumaltemple.org

Sunday 21 August 2011

திருப்பழனம் படங்கள்


திருப்பழனம்  படங்கள்:

                                                          வீணா தட்சிணாமூர்த்தி 


கஜ சம்ஹாரர் 

தொடரும்...


திருப்பழனம்

திருப்பழனம்...

சப்தஸ்தான தலங்களில் நாம் முதலில் பார்க்க போவது திருப்பழனம்.
திருவையாறு கும்பகோணம் வழியில் சந்திர பரிகார தலமான  திங்களூருக்கு அடுத்து உள்ளது.இந்த தலம் திருவையாறில் இருந்து 4 கி.மீ தூரத்தில்
கும்பகோணம் பேருந்து சாலையில் உள்ளது. 

இறைவன் பெயர்: ஆபத்சகாயநாதர் 
இறைவி பெயர்: பெரியநாயகி
பதிகம்: திருஞானசம்பந்தர் - 1,திருநாவுக்கரசர் - 5
தல மரம்: கதலி (வாழை)

ஆலய அமைப்பு:

 *  5 நிலை ராஜா கோபுரம். 3 நிலை உள் கோபுரம்.
 *  சுவாமி மற்றும் அம்பாள் தனி சன்னதிகள் உள்ளன.
 *  மங்கள தீர்த்தம் எனும் குளம் பாழடைந்து கோவில் உள்ளே உள்ளது.
 *  சுவாமி சன்னதி முழுவதும் கருங்கல் திருப்பணி.
 *  சுவாமி சன்னதி கோஷ்டங்கள் அனைத்தும் மிக அழகானவை.

தல வரலாறு:

இந்த தல வரலாறு திருவையாறு தல புராணத்துடன் சேர்ந்தது. சுசரிதன் என்ற சிறுவன் தாய் தந்தையரை இழந்து பல்வேறு தளங்களை தரிசனம் செய்து கொண்டு திருப்பழனம் வந்து தரிசனம் செய்தான்.காலதேவன் இந்த சிறுவனிடம் வந்து இன்னும் ஐந்து நாட்களில் மரணம் அடைவாய் என்கிறார்.

சுசரிதன் தன்னால் சிவா தரிசனம் செய்ய முடியவில்லை என்று வருந்துகிறான்.திருபழனம் இறைவன் சுசரிதனுக்கு ஆசி வழங்கி திருவையாறுக்கு அனுப்புகிறார். அங்கே இறைவன் யமனை வதைத்து சுசரிதனுக்கு நீண்ட ஆயுளை அளிக்கிறார். இந்த யம சம்ஹார  மூர்த்தியே திருவையாறு தெற்கு கோபுர வாயிலில் உள்ள ஆட்கொண்டார் அவார்.

சிறப்பு : திருமறைநாயகி என்னும் அம்பாள் பீட ஸ்தானம்.

குறிப்புகள்:
1.பிரபலமான திங்களூர் ஆலயத்திற்கு அருகில் உள்ளது. இருந்தாலும் இந்த ஆலயத்திற்கு கூட்டம் குறைவுதான்.
2.நாங்கள் சென்ற போது வேறு யாரும் இல்லை.பூஜைகள் குறைவுதான்.
3.நண்பர்கள் சீழும் போது ஆலயத்திற்கு எண்ணெய், சூடம், திரி போன்றவைகளை கொண்டு செல்லவும்.
4.முடிந்தவர்கள் சுவாமி மற்றும் அம்பாளுக்கு வஸ்த்ரம் வாங்கி கொடுக்கவும்.
5.தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் வரிசையில் இந்த இடமும் ஒரு சிற்ப களஞ்சியம். புகைப்படங்கள் தனியாக ஒரு பதிவில் வரும்.

ஆலய அர்ச்சகர்: ராஜு குருக்கள். தொலைபேசி  எண்: 04362 326668

Monday 8 August 2011

An appeal from Paramacharya....

காஞ்சி பெரியவரின் அருளுரை:
நண்பர்களின் பார்வைக்கு..

திருக்கருக்குடி..

திருக்கருக்குடி ... இப்படி சொன்னால் இன்று யாருக்கும் தெரியாது. தலத்தின் இன்றைய பெயர் மருதாநல்லூர்.

மருதாநல்லூர் என்றவுடன் நினைவுக்கு வருவது ஸ்ரீ சத்குரு சுவாமிகள்.
நாமசங்கீர்த்தன பிதாமகர். தியாகராஜ சுவாமிகளுக்கு தீட்சை அளித்தவர்.
போஜேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்தை காவிரிக் கரையில் கண்டு பிடித்தவர். சுவாமிகளை பற்றிய விஷயங்களை வேறு பதிவுகளில் பார்க்கலாம்.

வழி:
மருதாநல்லூர், கும்பகோணம் - வலங்கைமான்  சாலையில் உள்ளது. மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் மடத்திற்கு பின்புறம் இந்த ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு  மிக அருகே கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி அம்பிகை ஆலயம் உள்ளது.

இறைவன் பெயர்: சற்குணலிங்கேஸ்வரர், கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர்
இறைவி பெயர்: சர்வலங்கார நாயகி, அத்வைத நாயகி, கல்யாணநாயகி

சிறப்பு : ஹனுமத் லிங்கம்.

பதிகம் : திருஞானசம்பந்தர் - 1

கோயில் அமைப்பு:

சிறிய கோயில்.கிழக்கு நோக்கியது . சுவாமி,அம்பாள் சன்னதிகள்
கிழக்கை நோக்கி உள்ளனர்.ஹனுமத் லிங்கம் தனி சன்னதியாக உள்ளது.கோஷ்டத்தில் நர்த்தனவிநாயகர், தட்சிணாமூர்த்தி,லிங்கோத்பவர் ஆகியோரின் மூர்த்தங்கள் உள்ளன. 

பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், நவகிரக சந்நிதி. சூரியன், சந்திரன், லிங்கோத்பவர், முருகன் உள்ளனர். இத்தல விநாயகர் வலம்புரி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பிரம்மா, சற்குணன் என்ற அரசன் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபபட்டுள்ளனர். இதனால் இறைவன் சற்குணலிங்கேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

தல வரலாறு:

ராமேஸ்வர வரலாறு இந்த தலத்திற்கும் சொல்லப்படுகிறது.ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் இத்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இராமேஸ்வரத்தில் நடந்தது போல குறித்த நேரத்தில் வழிபாடு செய்ய அனுமன் சிவலிங்கம் கொண்டு வர தாமதமானதால், ராமன் தன் அருகிலிருந்த மணலிலேயே இரண்டு கைகளாலும் லிங்கம் பிடித்து இத்தலத்தில் வழிபட்டார்.மண்ணினை கையால் பிடித்து செய்த சுவடுகள் தெரிகிறது.அர்ச்சகர் தீபம் கட்டும் போது அந்த சுவடுகளை காட்டினர்.
சுவாமிக்கு குவளை சார்தி அபிஷேகம் செய்கின்றனர். அனுமன் கொண்டு வந்த லிங்கம் ஹனுமத் லிங்கம் என்ற பெயரில் தனி சன்னதியில் உள்ளது.

தனஞ்சயன் என்ற வணிகனுக்கு ஏற்பட்ட தொழு நோயை சுவாமி குணப்படுத்தினார். அம்மன் சன்னதி எதிரில் தனஞ்சயன் சிலை உள்ளது.
உத்திரம் நட்சத்திரம் /கன்னி ராசி நண்பர்கள் வழிபடவேண்டிய ஆலயம் இது.

பரிகார தலங்களை போல பிரபலமான தலம் இல்லாததால் கூட்டம் அவ்வளவாக இல்லை.நான் பட்டிஸ்வரத்தில் இருந்து இந்த கோயிலுக்கு வந்தேன்.வழக்கம் போல நானும் அர்ச்சகரும் மட்டும் தான். இங்கிருந்து பிறகு கருவளர்ச்சேரி சென்றேன்.

குறிப்பு:

1 .மிகவும் சிறிய கிராமம்.வசதிகள் எதுவும் இல்லை. எனவே வேண்டிய பூஜை பொருட்களை கும்பகோணம் அல்லது பட்டிஸ்வரத்தில் வாங்கி கொள்ளவும்.
2 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.இத்தகைய பழமையான ஆலயங்களுக்கு செல்லும் போது நல்லெண்ணெய், திரி, karpooram போன்றவற்றை கொண்டு செல்லவும்.முடிந்தால் சிறிது புஷ்பம்.
3. ஆலய அர்ச்சகர் : ஸ்ரீதர் குருக்கள் . அலைபேசி எண்: 9943523852
இவரே ஏனாதி நாயனார் அவதரித்த எயினனூர் கோயிலையும் பார்க்கிறார்.

அங்கே எடுத்த படங்கள் சில...

தனஞ்செயன்




ஹனுமத் லிங்கம் 




Friday 5 August 2011

சப்தஸ்தானம்....1

சப்தஸ்தானம்....

திருவையாறு சப்தஸ்தான யாத்திரை  பற்றி பதிவுகளை தொடங்குகிறேன்.

சப்தஸ்தானம் -  7 தலங்கள். திருவையாறில் தொடங்கி திருபழனம்,திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, கண்டியூர்,
தில்லைஸ்தானம், திருபூந்துருத்தி போன்ற தலங்களை
தரிசனம் செய்வது. 

இந்த தலங்களை ஒரே நாளில் திருவையாறை மையமாக
கொண்டு தரிசனம் செய்யலாம்.

ராஜராஜ சோழனின் பட்டத்துஅரசி  லோகமாதேவி அவர்களால் தொடங்கப்பட்டது  தான் சப்தஸ்தான திருவிழா. சிலாத மகரிஷியின் புதல்வர் ஜப்பேசனின் திருமண விழாதான் இந்த சப்தஸ்தான
விழாவாக நடைபெறுகிறது.

ஐயாறப்பரும், தர்மசம்வர்த்தினி அம்மையும், திருமண தம்பதியரோடு பல்லக்கில் ஏழு ஊர் செல்வது இந்த விழாவின் சிறப்புஅம்சம்.
திருவையாறு வட்டத்தின் பரபலமா திருவிழாக்களில் இதுவும் ஒன்று.

இந்த தளங்கள் அனைத்தும் காவேரி ஆற்றின் இரு கரைகளில் அமைந்துள்ளன.

குறிப்புகள்:
1 .தலங்கள் அனைத்தும் கண்டியூர், திருவையாறு நீங்கலாக சிறு கிராமங்களில் அமைந்துள்ளன.
2 .சாலை வசதிகள் சுமார் தான்.மழை காலங்களில் தஞ்சை பகுதி சாலைகள் பயணம் செய்வதற்கு வசதியாக இருக்காது.
3 .உணவு வசதிகள் திருவையாறில் மட்டுமே உள்ளன. அதுவும் சிறு 
உணவகங்கள் மட்டுமே.தங்கும் வசதிகளும் தஞ்சையில் மட்டும் தான். வெளியூர் நண்பர்கள் தஞ்சாவூரில் தங்கி கொண்டு இந்த இடங்களை தரிசனம் செய்யலாம்.
4 . காவேரி ஆற்றில் நீர் வரத்து இருக்கும் போது இந்த இடங்களுக்கு பிரயாணம் செய்வது மிக அருமையானது. நான் ஆடி பெருக்கிற்கு பின்பு பிரயாணம் செய்த போது அணைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் வரத்து இருந்தது.
5 . தலங்கள் சிறு கிராமங்களில் இருப்பதால் திருவிழா காலங்களில் மட்டுமே நல்ல கூட்டம் இருக்கும். மற்ற நாட்களில் ஆலய தரிசன நேரம் தெரிந்து தரிசனம் செய்யலாம்.
6 . இனிப்பு பிரியர்களுக்கு.... திருவையாறு ஆண்டவர் அசோகா கடை..
திருவையாறு ஆலயத்திற்கு அருகில் உள்ளது (ஆட்கொண்டார் சன்னதி அருகில்).. இந்த கடையில் அசோகா அல்வா மிகவும் பிரபலம்.திருவையாறு செல்பவர்கள் ஒரு கை பார்க்கலாம்.... மன்னிக்கவும்...ஒரு வாய் அல்வா சுவைக்கலாம்.

இனி வரும் பதிவுகளில் இந்த தலங்களை பார்க்கலாம்..........






Wednesday 3 August 2011

காவளூர் கந்தன் ...

காவளூர்.. 

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பழமையான முருக ஸ்தலங்களில் ஒன்று..
அருணகிரிநாதர் பெருமானால் பாடல பெற்றது. 

வழி:
தஞ்சை மாவட்டத்தில் இந்த தலம் திருக்கருகாவூர்  அருகில் உள்ளது.
1: தஞ்சாவூர் அகரமாங்குடி வழியில் அகரமாங்குடி அடைந்து 1கி.மீ சென்றால் இத்தலத்தை அடையலாம்.
2: தஞ்சாவூர் திருக்கருகாவூர் வழியில் நரியனுரில் இறங்கி 1கி.மீ சென்றால் இத்தலத்தை அடையலாம்.
3: கும்பகோணம் தஞ்சாவூர் வழியில் ஐயம்பேட்டை, சூலமங்கலம், புண்ணியநல்லூர் , பெருமாக்கனல்லூர் வழியில் இந்த ஆலயத்தை அடையலாம்.

நான் திருக்கருகாவூர் சென்று அங்கிருந்து காவளூர் பயணம் செய்தேன்.
நல்ல சாலை. செல்லும் வழி எங்கும் தோப்புகள் மற்றும் நீர் நிலைகள். 

மூலவர் விமானம் அறுகோணத்தில் உள்ளது. ஆலயம் ஒரு கட்டுமலை மேல் உள்ளது. 12 படிகள் உள்ளன. இந்த படிகள் ராசிகளை குறிக்கின்றன.  ஆறு மண்டபங்கள் அமைந்துள்ளன. 

முருகன் ஆறு முகங்களும் பன்னிரு கரங்களும் கொண்டு வள்ளி தேவசேனா உடன் மயிலோடு நின்ற திருக்கோலம். 

விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி அம்பாள் பரிவார தெய்வங்களாக உள்ளனர். கோயில் பின்புறம் குமார தீர்த்தம் என்ற குளமும், வெட்டாறு நதியும் இந்த தலத்தின் தீர்த்தங்கள். 

"மானை நேர் வழி" என்ற பாடலை அருணகிரிநாதர் இத்தலத்தின் இறைவன் மேல் பாடியுள்ளார்.

நான் சென்ற போது ஒரு வயதான பெரியவர் எனக்கு தரிசனம் செய்ய உதவினார். அப்பெரியவருக்கு 75 வயதிற்கு மேல் இருக்கும்.என்னால் அவரிடம்  இருந்து வேறு தகவல்கள் பெற முடியவில்லை. நண்பர்கள் வேறு தகவல் இருந்தால் தெரிவிக்கவும். 

காவளூர் மிகவும் சிறிய கிராமம்.வசதிகள் எதுவும் இல்லை. எனவே வேண்டிய பூஜை பொருட்களை தஞ்சை அல்லது திருகருகவூரில் இருந்து வாங்கி  வரவும்.கோவில் பிரபலமடையாததல் கூட்டம் அதிகம் இல்லை. நான் மட்டுமே அங்கு இருதேன் பெரியவருடன். அமைதியான தரிசனம்.ஊரே வேடிக்கை பார்த்தது.. யார் இவன் என்று ?...

தஞ்சை மற்றும் திருகருகாவூர் செல்லுபவர்கள் இந்த தலத்திற்கும் கண்டிப்பாக செல்லுங்கள்.இந்த தலத்தை தரிசனம் செய்தால் ஒரு மகாமகம் சென்ற புண்ணியமாம்... நான் வாங்கி கட்டிகொண்டேன்...??? புண்ணியத்தை தான்.

படங்கள் சில...






ஆலய அர்ச்சகரின் எண்:
                                            
                                                     பெருமான் தரிசனம்

                                              

மிளகனூரில் ஒரு நாள்....1

மிளகனூர்...

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் உள்ள ஒரு அழகான கிராமம் மிளகனூர். 2011ஜூன் மாதம் 19 ஆம் தேதி மிளகநூரில் நடந்த லக்ஷ்மி நாராயண பெருமாள் ஆலய குடமுழுக்கு  விழாவிற்கு நாங்கள் சென்று இருந்தோம்.எங்கள் குடும்ப நண்பர் மானாமதுரை  திரு.சத்யநாராயணன் அவர்களின் குடும்பம் இந்த விழாவை ஏற்பாடு செய்து இருந்தனர்.

19 ஆம் தேதி விடியற் காலையில் திருச்சியில் இருந்து கிளம்பி காரைக்குடி மானாமதுரை  வழியாக மிளகனூரை  அடைந்தோம்.
மிளகனூரில் உள்ள மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயத்தை மிகவும் அழகாக பராமரிக்கின்றனர். மீனாக்ஷி அம்மன் கனவில் வந்து உத்தரவு இட்ட படி இந்த ஆலயம் கட்டப்பட்டு உள்ளது.பரிவார தேவதைகளுடன் உள்ள அழகான ஆலயம். வருடந்தோறும் எல்லா பண்டிகைகளும்  இந்த ஆலயத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. 

இந்த ஆலயத்திற்கு அருகில் லக்ஷ்மி நாராயண பெருமாள் ஆலயம் புதிதாக  கட்டப்பட்டு உள்ளது.யாக சாலை பூஜைகள் 17 ஆம் தேதி ஆரம்பிக்கபட்டது. 
19 ஆம் தேதி காலையில் 10 -15 - 11 .௦௦ மணி அளவில் குடமுழுக்கு நடை பெற்றது.

என் பயணங்களில் குடமுழுக்கு விழாவை காண்பது இதுவே முதல் முறை.
அங்கே எடுத்த புகைபடங்கள் சில....

1. குடமுழுக்கு பத்திரிக்கை..


 லக்ஷ்மி நாராயண பெருமாள் ஆலயம்..

Tuesday 2 August 2011

துவக்கம் ........


அருமை நண்பர்களுக்கு....

இந்த பதிவுகள் என்னுடைய பயணங்களின் தொகுப்பு... தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு பாடல் பெற்ற ஆலயங்கள் மற்றும் தலங்களின் வழிகாட்டி.

என்னுடைய முதல் பதிவு .. மிளகனூர் ஆலயத்தை பற்றியது..